சர்மாஸ் ஸொல்யூஷன்ஸ் அண்ட் ப்ராடக்ட்ஸ் நிறுவனம் சர்மா நிறுவனங்களில் ஒன்றாகும். 1920 முதல் இன்றளவும் புதுக்கோட்டையில் எங்கள் சர்மா குடும்பத்தார் இயற்கை மருத்துவ நூல்களை பதிப்பிக்கும் நேச்சர் க்யூர் பப்ளிஷிங் ஹவுஸ் என்ற பெயரில் புத்தக பதிப்புத்துறையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 85 ஆண்டுகளில் பல இயற்கை மருத்துவ நூல்களும் அவற்றின் பலப்பல பதிப்புகளும் வெளிவந்துள்ளன.
1946- 1948ல் எங்களுக்கு சொந்தமான பாரத் ப்ரஸ் என்ற அச்சகம் இருந்தது. நீண்ட இடைவெளிக்குப் பின் 1973 முதல் சர்மாஸ் ஸானடோரியம் ப்ரஸ் என்ற பெயரில் அச்சகம் ஒன்றை புதுக்கோட்டையில் நடத்தி வருகிறோம். மற்ற பல அச்சகத்தாரைப் போலன்றி ஆரம்ப முதலே நாங்கள் தமிழ், ஆங்கிலம், சமஸ்க்ருதம், ஹிந்தி மொழிகளில் புத்தகங்களை அச்சிடும் பணிகளையே பெருமளவு மேற்கொண்டிருக்கிறோம். பத்திரிகைகள், அழைப்பிதழ்கள், படிவங்கள் அச்சிடல் போன்ற பணிகளுக்கு முன்னுரிமை அவ்வளவாக அளிக்கவில்லை என்ற போதிலும் புத்தககங்கள் அச்சிடும் பணியில், அச்சு இயந்திரத்தில் அச்சு ஏறும் வரை பலமுறை பிழை(Proof) திருத்த வேண்டியிருக்கும் இதன் காரணமாய் சிறுவயது முதலே எங்களுக்கு பிழை (Proof) களை சரிப்பார்ப்பதில் பலமான அடித்தளம் உருவானது.
1987ல் கைகளினால் அச்சுக்கோர்த்து அச்சடிக்கும் பழைய தொழில் நுட்பத்திலிருந்து முன்னேறி கம்ப்யூட்டர்கள், லேசர் பிரிண்டர்கள் என அதிநவீன தொழில் நுட்பத்தை அச்சுத்துறையில் தமிழ்நாட்டிலேயே முதன் முதலாய் அறிமுகப்படுத்தினோம்.1988 ஜூலையில் லேசர் பிரிண்டர்கள் மூலம் தமிழ், ஹிந்தி, சம்ஸ்க்ருதம் மொழிகளில்அச்சிட ஏதுவான மென்பொருளை பயன்படுத்தி மேற்குறிப்பிட்ட மொழிகளில் அச்சுப்பணிகளை துவங்கினோம். இம்முறையில் தமிழ்நாட்டிலேயே நாங்கள் தான் முன்னோடிகள். இந்த நவீன லேசர் பிரிண்டிங் முறையிலும் ஆங்கிலம், தமிழ், சம்ஸ்க்ருதம்(Sanskrit) மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளில் புத்தகங்கள் அச்சிடும் பணிகளையே பெருமளவில் செய்கிறோம்.
சில ஆண்டுகளாய் சம்ஸ்க்ருத(Sanskrit) மொழி நூல்களை தமிழ்நாட்டில் முன்பு சிறப்பாக விளங்கிய க்ரந்த (Grantham) எழுத்துக்களிலும் அச்சிடுகிறோம்.இந்நிறுவனத்தின் உரிமையாளராகிய நானும் இயற்கை மருத்துவத்தில் (Nature Cure)ஆங்கிலம் மற்றும் தமிழில் 10 நூல்கள் மற்றும் பல கட்டுரைகளும் எழுதியுள்ளேன். இத்தனை ஆண்டுகளில் புத்தகங்களின் பிழை (Proof) சரிபார்த்து வந்ததில் ஆங்கில மொழியில் உள்ளது போல் சொற்பிழை (Spell Check)மற்றும் இலக்கண பிழைச்சுட்டிக்கான (Grammar Checking) மென்பொருள் (Software) ஏதும் இந்திய மொழியில் இல்லையே என்ற ஆதங்கமும் ஏற்பட்டது உண்டு. தமிழில் இது போன்ற பிழைச்சுட்டி இருந்திருப்பின் உள்ளீடு செய்யும் போதே பிழைகள் திருத்தப்பட்டால் பிழை திருத்துவதன் பளு குறைக்க பட்டிருக்கும். பல ஆண்டுகளாய் எங்களுக்குள் கனன்று வந்த உந்துதலின் விளைவே தற்போது நாங்கள் உருவாக்கியுள்ள ‘‘சர்மாவின் சொற்பிழைச்சுட்டி'' என்ற கணிப்பொறியில் தமிழ் மொழிக்கான மென்பொருளாகும்.
ஆங்கில மொழி சொற்பிழைத் திருத்திகள் 1990 வாக்கில் வெளியானது. ஆங்கில மொழியிலுள்ள வார்த்தைகள் யாவும் 1920 களிலேயே ஒருங்கிணைக்கப்பட்டு விட்டன. அவ்வப்போது ஆங்கிலமொழி வல்லுநர்களால் அங்கீகரிக்கப்பட்ட புதிதாய் உருவான ஆங்கில மற்றும் பிறமொழியிலிருந்து தருவிக்கப்பட்டு ஆங்கில வார்த்தைகளாய் ஏற்றுக் கொள்ளப்பட்டவைகளும் இத்தொகுதியில் ஒவ்வொரு ஆண்டும் சேர்க்கப்பட்டு வருகின்றன. இத்தொகுதியே (Word Collection) ஆங்கில சொற்திருத்திக்கான ஆதாரமாகும்.
ஆங்கில மொழியை ஒப்பிடும்போது இந்திய மொழிகள் பலவகைகளில் வேறுபடுகின்றன. இம்மொழிகள் பலவும் பழமை வாய்ந்ததாலும், பெருமளவில் பேச்சு வழக்கிலும் உள்ளதாலும் விரிவான மற்றும் முறையான இலக்கண விதிகள் பழங்காலத்திலேயே ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆயினும் ஐரோப்பிய மொழிகளில் உள்ளது போல் இந்திய மொழிகளில் இதுவரை முழுமையானதும் முறைப்படுத்தப்பட்டதுமான சொற்குவியல் (Word Collection) உருவாக்கப்பட்டு பெருமளவில் ஒருங்கிணைக்கப்படவில்லை.
மொழி என்பது தகவல் பரிமாற்றத்துக்கான அடிப்படையான ஊடகமாகும். தமிழ் மொழியைப் பொருத்தவரை எழுத்து(Letter), சொல்(Word), பொருள்(Meaning) என ஒவ்வொரு நிலைக்கும் அடிப்படையான இலக்கண விதி முறைகள் உள்ளன. இலக்கண விதிமுறைகளை அறிந்தோ, அறியாமலோ மீறும்போது தவறான பொருளை உணர்த்துவதாகக் கூட மாறக்கூடும். தற்போது புழக்கத்தில் சில தமிழ் சொற்பிழை திருத்தி மென்பொருட்கள் உருவாக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் இம்மென்பொருட்கள். ஆங்கில மொழியில் உள்ள ஆங்கில சொற்குவியல்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள, ஆங்கில மொழி சொற்பிழை திருத்தி மென்பொருட்களின் வடிவமைப்பை ஒட்டியே உருவாக்கப்பட்டுள்ளவையாகும். மேலும் இம்மென்பொருட்கள் பெரும்பாலும் தமிழின் அடிப்படை இலக்கண விதிகளான புணர்ச்சி, சந்தி, விகுதி போன்ற அம்சங்களை கணக்கிலெடுத்துக் கொள்ளவும் இல்லை. தற்காலத்தில் தமிழ்மொழியைப் பேசுவோரும்/எழுதுவோரும் அடிப்படை இலக்கண விதிகளை முழுமையாக பின்பற்றுகிறார்களா என்பது கேள்விக்குறியாகும். வழக்குமொழி என்ற பெயரில் கொச்சைப்படுத்துவது வழக்காகிவிட்டால் மொழியின் வளர்ச்சியில் தேக்கம் ஏற்படாதா?
பேச்சுத்தமிழ், உரைநடைத்தமிழ் மற்றும் கவிதை புனைதல் என தமிழ்மொழியில் கருத்துக்கள் பரிமாற்றம் செய்யப்படுகின்றது. கம்ப்யூட்டர் வசதி மூலம் உலகெங்கும் தமிழர்கள் ஒருவருக்கொருவர் தகவல் பரிமாற்றம் செய்து கொள்வது நாளுக்கு நாள் விரிவடைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் நம் மொழிக்கென ஓர் தரமானதும், சொல் வளத்தில் ஆழமானதும், விரிவானதும் (சுமார் 4,50 லட்சம் தமிழ் வார்த்தைகளின் தொகுப்பும், சுமார் 1,60,000 பொதுப்பெயர்ச்சொற்களும்) அடிப்படை இலக்கண விதிகளை உள்ளடக்கியதுமான(சந்தி, புணர்ச்சி, விகுதி போன்றவை) சொற்பிழைச்சுட்டி / திருத்தி ஒன்றை உருவாக்கும் நோக்கத்தில் இம் மென்பொருள் எங்களது முயற்சியாகும்.